
கோவை,
கோவை கே.கே.புதூர் காளியப்பா வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (55), ரியல் எஸ்டேட் அதிபரான இவர் வீடுகளை கட்டியும் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு ரியல் எஸ்டேட் நடத்தி வரும் கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த குணேசேகரன், பிளமேடு வேலுமணி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.
அவர்கள் 2 பேரும் இருகூரை சேர்ந்த சுரேஷ் என்பவரை வெங்கடேசனுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து வெங்கடேசனிடம் சூலூர் பாப்பம்பட்டியில் 10 ஏக்கருக்கும் மேல் இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் வீடுகளை கட்டி விற்பனை செய்து லாபத்தை பாதியாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறி உள்ளனர்.
இதற்கு வெங்கடேசன் சம்மதம் தெரிவித்ததுடன் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தே முதல் அதே ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி வரை சுரேஷ் என்பவரின் வங்கி கணக் குக்கு ரூ.64 லட்சம் ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார். ஆனால் அதற்கான ஒப்பந்தமும் செய்து கொடுக்கவில்லை.
இது தொடர்பாக வெங்கடேசன் விசாரித்ததில் 3 பேரும் சேர்ந்து ஏமாற்றி மோசடி செய்து பணத்தை பெற்றுக்கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக வெங்கடேசன் கேட்டபோது ரூ.3 லட்சத்தை மட்டுமே திரும்பி கொடுத்து உள்ளனர். மீதமுள்ள பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். மேலும் மிரட்டலும் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வெங்கடேசன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், குணசேகரன், வேலுமணி ஆகிய 3 பேரை கைது செய்தனர், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.