
கோவை,
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பாப்பீஸ் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. நட்சத்திர ஹோட்டலான இதில் வார இறுதி நாட்களில் தம்பதிகள் மட்டும் ஜோடிகளாக பங்கேற்கும் நடன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஜோடிகளாக வருபவர்கள் மட்டுமே அனுமதிப்பார்கள். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி இரவு விலை உயர்ந்த பென்ஸ் சொகுசு காரில் நான்கு பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். அப்பொழுது அங்கு இருந்த பாதுகாவலர்கள் அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி ஜோடிகளாக வந்தால் மட்டுமே அனுமதி உண்டு. இல்லை என்றால் உள்ளே செல்லக் கூடாது என்று கூறினார்கள். அதற்கு அந்த இளைஞர்கள் தங்களிடமிருந்த கட்டு கட்டான பணத்தை எடுத்து எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தருகிறோம். எங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள் .அதற்கு அவர்களை உள்ளே செல்ல பாதுகாவலர்கள் மறுத்து விட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவரை மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் உடனே தங்கள் கார்களிலிருந்து ஓடிச் சென்று கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்து பாதுகாவலர்களை தாக்க முயன்றனர் . இதை அறிந்த அந்த ஓட்டலில் உள்ள பாதுகாவலர்கள் அனைவரும் உருட்டு கட்டைகளுடன் வந்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. கோவை நகரின் மையப்பகுதியான ரேஸ் கோர்ஸில் சாலையில் இரு தரப்பினரும் ஆபாச வார்த்தைகள் பேசியதோடு ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சிலர் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கத்தி மற்றும் ஆயுதங்களுடன் நின்றிருந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் ஹோட்டலில் உள்ள பாதுகாவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து பப்பிஸ் ஹோட்டல் அக்கவுண்டன்ட் விஷ்ணுபாரதி ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் லட்சுமணன், டேவிட், ஜான்சன், ஜெர்ரி ஆகிய நான்கு பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆன நிலையில் கோவை சரவணம்பட்டி ரெவின்யூ நகர் பகுதியை சேர்ந்த மார்ட்டின் ரிச்சர்ட் ஜார்ஜ் என்பவரின் மகன் ஜான்சன்(50) ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளார் .அந்த புகாரில் தனது மகன் பிறந்த நாளுக்காக பாப்பீஸ ஹோட்டலில் ஹால் ஒன்றை புக் செய்வதற்காக 2500 ரூபாய் பணத்தை கூகுள் பே மூலம் ஹோட்டலுக்கு அனுப்பியிருந்தேன். இதை தொடர்ந்து 10 ஆம் தேதி இரவு அந்த ஹாலை பார்ப்பதற்காக ஹோட்டலுக்கு சென்றபோது ஹோட்டலின் முன்பு நின்று கொண்டிருந்த பவுன்சர்கள் எனது மகன் டேவிட்டை தடுத்து நிறுத்தி தாக்கி உள்ளனர். இதில் டேவிட்டுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் டேவிட் கையில் அணிந்திருந்த விலை உயர்ந்த வைரம் மோதிரத்தை அங்கிருந்த பவுன்சர்கள் பறித்து கொண்டனர் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசார் பாப்பீஸ் ஹோட்டலின் அக்கவுண்டன்ட் விஷ்ணு பாரதி மற்றும் அங்கு பணியில் இருந்த பவுன்சர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.