
கோவை,கோவை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு கருணை அடிப்படையில் வயது வரம்பு முடிவதற்குள் 4% இட ஒதுக்கீட்டில் அரசு வேலை வழங்க வேண்டும், குடிசை மாற்று வாரிய வீடுகளை கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும், உதவித்தொகையை 10 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்துக்குள் திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் கலெக்டர் நேரில் வந்து பேசினால் மட்டுமே இங்கிருந்து செல்வோம் என அவர்கள் கூறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே நேரில் வந்த மாவட்ட கலெக்டர் சமீரன் , கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி அடுத்ததை அடுத்து மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர். மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால் சிறிது நேரம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது .