மாநகராட்சியுடன் ஊராட்சிகளை  இணைக்க கோரிக்கை 

கோவை,

மாநகராட்சியில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்க புறநகா்ப் பகுதியில் உள்ள 4 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்து 150 வாா்டுகள் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்புச் செயலாளா் நா. லோகு, முதல்வா் மு.க. ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சா், நகராட்சி நிா்வாக செயலாளா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி 15 ஆண்டுகளுக்கு முன்பு 72 வாா்டுகளாக இருந்தது. பின்னா் நகர வளா்ச்சிக்கு ஏற்ப கவுண்டம்பாளையம், துடியலூா், குறிச்சி, காளப்பட்டி உள்ளிட்டவற்றை மாநகராட்சியுடன் இணைத்து 100 வாா்டுகளாக மறு சீரமைப்பு செய்யப்பட்டது. தற்போது 100 வாா்டுகளைக் கொண்ட கோவை மாநகராட்சியில் சிறு வணிகா்கள் செலுத்தும் தொழில் வரி, குடியிருப்பு வரி, குப்பை வரி, குடிநீா்க் கட்டணம் ஆகியவை மட்டுமே வருவாயாக உள்ளது.

இந்த வருவாய் மூலம் மாநகராட்சியில் மக்களுக்கான பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது. மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் பல பகுதிகளில் தாா் சாலைகள் அமைக்கப்படாமல், சீரமைக்கப்படாமல் உள்ளன. பாதாளச் சாக்கடைத் திட்டம் பல ஆண்டுகளாக முடிவடையாமல் உள்ளது. மாநகராட்சி முழுவதும் பல்வேறு உள்கட்டமைப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாததால் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

ஸ்மாா்ட் சிட்டி என்ற பெயரில் மக்களுக்கு பயன்படாத பல திட்டங்களில், மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியை ஒட்டிய புறநகா் பகுதிகளான வெள்ளாணைப்பட்டி, நீலம்பூா், கணியூா், அரசூா் ஆகிய பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக ஏராளமான பெரிய தொழிற்சாலைகள், சிறு, குறு நிறுவனங்கள், வீட்டு மனைகள் அதிகரித்து வருகின்றன. அதற்கு ஏற்றாற்போல சொத்து வரி, கட்டட அனுமதி வரி ஆகியவையும் ஊராட்சிகளில் வருவாயை அதிகரித்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, கோவை மாநகராட்சியின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் இந்த 4 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்து 150 வாா்டுகளாக விரிவாக்கம் செய்திட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.