கோவை,

கடந்த அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.பி .வேலுமணி. இவர் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவாக தற்போது இருந்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியின் போது மிகவும் பலம் பொருந்திய அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் எஸ் .பி. வேலுமணி. தற்போதும் அதிமுகவில் மிக முக்கியமான ஒரு நபராக இருந்து வருபவர் எஸ் .பி. வேலுமணி. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது எஸ். பி. வேலுமணி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் திமுக ஆட்சிக்கு பொறுப்பேற்றது தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தமிழக முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில்  முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .இதை அடுத்து இந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் அலுவலகங்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி அவரது சகோதரர் அன்பரசன், ஹேமலதா அன்பரசன் அவரது நண்பர்கள் சந்திரசேகர் உட்பட 10 பேர் மற்றும் 3 தனியார் நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் காவல்துறையில் பணியாற்றி வரும் கோவை மாவட்ட ஏடிஎஸ்பி அனிதா, டிஎஸ்பி சண்முகம், இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், சந்திரகாந்தா ஆகியோரது வீட்டிலும் அவர்களுக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .

இந்த இரண்டு முறையும் சோதனை நடைபெற்ற பொழுது எஸ்பி வேலுமணியின் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்தனர் .திமுக ஆட்சி நடைபெற்று வந்தாலும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று எம்எல்ஏக்களாக இருப்பதால் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எஸ் பி வேலுமணியின் வீட்டின் முன்பு திரண்டு தொண்டர்களுக்கு தேவையான உணவுகள் வழங்கி வந்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடுகள் அலுவலகங்கள் என 26 இடங்களில் தமிழகம் முழுவதும் தற்போது சோதனை நடைபெற்ற வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுது கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றம் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது மிகப்பெரிய அளவில் முறையீடு செய்து தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்த பணிகள் வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையான லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சோதனை நடை பெற்று வருகிறது. எஸ். பி .வேலுமணியின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் தற்போது சோதனை நடைபெற்ற வரும் தகவலை அறிந்த அதிமுகவினர் அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள  கே சி பி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் ,கே சி பி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் இன்ஜினியர் ஆர். சந்திரசேகர் ,கோவை வடவள்ளியில் உள்ள ஏஸ் டெக் மிஷனரி காம்பொனென்ட் ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சீனிவாசன், இயக்குனர் சித்தார்த்தன், கோவை பி என் புதூரில்  உள்ள சி ஆர் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் ராஜன் ,சென்னை அம்பத்தூரில் உள்ள சபரி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன், சென்னை புரசைவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள முருகன் எலக்ட்ரிக்கல் டிரேடர்ஸ் பங்குதாரர் பரசுராமன், சென்னை வேளச்சேரி ஓரியன் போல்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் விஜயகுமார், சென்னை கோடம்பாக்கம் ஆர் கே எம் எலெக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் மணிவண்ணன் மற்றும் பலர் மீது முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்த முதல் தகவல் அறிக்கையில் எஸ் பி வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக உள்ளாட்சி மற்றும் ஊரக நகர்ப்புற துறை அமைச்சராக இருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு கிராமப்புற பஞ்சாயத்து ராஜ் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றுவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் தமிழக முழுவதும் உள்ள 8 லட்சம் தெரு விளக்குகளில் எல்இடி விளக்குகளை மாற்றுவதற்காக 300 கோடி ரூபாய் திட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து  2016 முதல்  2018 ஆம் ஆண்டு வரை  தமிழக முழுவதும் உள்ள தெருவிளக்குகளில் பொருத்தப்பட்டுள்ள மெர்குரி விளக்குகள், சோடியம் விளக்குகள் மற்றும் ட்யூப் லைட்டுகளை மாற்றி விட்டு எல்இடி விளக்குகளாக மாற்றுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதற்காக 875 கோடியே 70 லட்சத்தி 676 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதை அடுத்து அந்தப் பணிகளுக்கான டெண்டர்கள் அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் சேலம், தர்மபுரி ,திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கே சி பி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஏஸ் மிஷனரி நிறுவனம் ,சி .ஆர். கன்ஸ்ட்ரக்சன், ராஜராஜேஸ்வரா கன்ஸ்ட்ரக்ஷன், கிருஷ்ணமூர்த்தி அண்ட் கோ ஆகிய நிறுவனங்கள் விதிகளை மீறி உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் டெண்டர்களை முறைகேடாக பெற்றது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சேலம், தர்மபுரி ,திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் பொருத்தப்பட்ட எல்இடி விளக்குகள் மார்க்கெட் விலையை விட கூடுதலாக இருந்தது ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி அரசுக்கு 74 கோடியே 58 லட்சத்து 700 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எல்இடி வழக்குகள் பொருத்தப்படும் திட்டத்தில பெரும்பான்மையான ஒப்பந்தங்களை எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதில் கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு மிகவும் நெருக்கமான இன்ஜினியர் வடவள்ளி சந்திரசேகர் பங்குதாரராக உள்ள நிறுவனமாகும் எஸ் பி வேலுமணியும் வடவள்ளி ஆர் சந்திரசேகரம் 20 ஆண்டுகளாக நெருக்கமான நட்பில் இருந்து வருபவர் மேலும் இன்ஜினியர் ஆர் சந்திரசேகர் அதிமுகவின் இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்து வருபவர் இவரது தந்தை ராஜனுக்கு சொந்தமான சி ஆர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனமும் போதிய அனுபவம் இல்லாமல் எல்இடி விளக்குகள் பொருத்தும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனம், ஏஸ் டெக் மிஷனரி நிறுவனம் உள்ளிட்டோர்  ஒப்பந்தம் பெறுவதற்கு அடிப்படை விதியான மூன்று ஆண்டுகள் எல்இடி விளக்குகள் பொருத்தும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படை விதிகளையே மீறி டென்டர்களை எடுத்து இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  இப்படி எந்த அனுபவங்களும் இல்லாத நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் எல்இடி வழக்குகள் பொருத்தும் ஒப்பந்தங்களை பெற்று இருப்பது முற்றிலும் விதியே மீறிய செயலாகும் முன்னாள் அமைச்சராக இருந்து வந்த எஸ் பி வேலுமணி தனது பதவி காலத்தில் தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்களின் நிறுவனங்களுக்கு இந்த டெண்டர்களை விதிகளை மீறி வழங்கி உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது இதன்படி மார்க்கெட் விலையை விட கூடுதல் விலைக்கு எல்.இ.டி விளக்குகளை வாங்கி பொருத்தியதில் ஐந்து மாவட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது இதன்படி தமிழக அரசுக்கு 74 கோடியே 58 ஆயிரத்து 700 ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை அரசுக்கு ஏற்படுத்தியதாக அப்போது அமைச்சராக செயல்பட்ட எஸ் பி வேலுமணி முதல் குற்றவாளியாகவும் மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களான சந்திர பிரகாஷ் ,இன்ஜினியர் ஆர் சந்திரசேகர் ,சீனிவாசன், சித்தார்த்தன் ,ராஜன், ராதாகிருஷ்ணன், பரசுராமன், விஜயகுமார் ,மணிவண்ணன் மற்றும் பலர் மீது தற்போது லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதன்படி 120 b ,409, 420, 13(2), 13(1)(c), 13(1)(d) ஆகிய பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அடுத்து கோவையில் சுகுணா புரத்தில் உள்ள உள்ள எஸ். பி .வேலுமணி வீடு , வடவள்ளியில் உள்ள  இஞ்சினியர் ஆர்.சந்திரசேகர் வீடு அலுவலகங்கள் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அவரது ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தகவல் அறிந்த எஸ் .பி. வேலுமணியின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர். அதே சமயத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இருவரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருவது அதிமுக வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.