தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு.
கோவை.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள
துாய மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் படித்து, ஐம்பது ஆண்டுகளானதை நினைவுபடுத்தும் வகையில், முன்னாள் மாணவர்களுக்கான பொன்விழா கொண்டாட்டம் நடந்தது.
கோவை துாய மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில், 1972 ஆம் ஆண்டு படித்து வெளியேறிய மாணவர்களுக்கு, பள்ளிப்படிப்பை முடித்து, ஐம்பது ஆண்டுகளாகி விட்டன. அதையொட்டி, பொன்விழா கொண்டாட்டம், பள்ளி வளாகத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக பள்ளியில் படித்த மாணவர்களான டாக்டர் சுந்தர்ராஜன் ,டாக்டர் நீலகண்டன், டாக்டர் சாமுவேல் விஜயகுமார் ,ஆடிட்டர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு தங்களது பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பள்ளியின் தற்போதைய தாளாளர் ஹென்றி டேனியல் பேசுகையில்,”பள்ளி படிப்பு முடித்தும், ஐம்பது ஆண்டுகளாக, நண்பர்களுடன்
தொடர்பில் இருப்பதும், இதுபோன்ற சந்திப்புகளை அவ்வப்போது நடத்தி, பள்ளி நாட்களை நினைவுப்படுத்திக் கொள்வதும், மகிழ்ச்சியான தருணங்கள். இந்நாளில், தங்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்களை மறக்காமல் நன்றி கூறுவதோடு, அவர்களை கவுரவப்படுத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது.
இதுபோன்ற கூட்டங்கள் இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும். இது உங்களுக்கான நாள் என்பதால், வழக்கமான வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து விடுபட்டு, மீண்டும் உங்கள் நண்பர்களுடன் வசந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,” என்றார்.விழாவை, முன்னாள் மாணவர்களான, ஓமியோபதி மருத்துவர் தாமரைச்செல்வன், சி.ஜே.ரகுநாதன், ஜெரோம், லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு, தாங்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து, பள்ளி கால நினைவுகளை அசைபோட்டனர். 1972 ஆம் ஆண்டு ஆசிரியர்களாக பணிபுரிந்த அல்போன்ஸ், பீமாராவ், அம்மாசை குட்டி ,சின்னசாமி ஆகியோரை அழைத்து கௌரவப்படுத்தி நினைவு பரிசு வழங்கினர். முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆண்டுதோறும் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெறுவோருக்கு 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்க உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.