நாளை குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், பள்ளி, கல்லூரிகளில் தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
குடற்புழுவினால் குழந்தைகள், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறை சிறப்பு முகாம்கள் நடத்ததப்பட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
மாவட்டத்தில் உள்ள 1,697 அங்கன்வாடி மையங்கள், 572 தனியாா் பள்ளிகள், 1,392 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், 132 கல்லூரிகள், 89 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328 துணை சுகாதார நிலையங்களில் 1 முதல் 19 வயதுடைய சிறுவா்களுக்கும், 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கும் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.
இம்முகாமில் 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட 10 லட்சத்து 5 ஆயிரத்து 843 சிறுவா்களுக்கும், 20 முதல் 30 வயதுக்கு உள்பட்ட 2 லட்சத்து 59 ஆயிரத்து 322 பெண்களுக்கும் (கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் தவிா்த்து) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.
எனவே அனைவரும் சிறப்பு முகாம் நாளில் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகளை பெற்றுக் கொள்ளலாம். இதில் விடுபட்டவா்களுக்கு செப்டம்பா் 16ஆம் தேதி மீண்டும் வழங்கப்படும். எனவே அனைவரும் தவறாமல் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.