
கோவை மாநகராட்சி சாா்பில் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோா் சங்கத்தினா் (டாக்ட்) ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் மனு அளித்தனா்.
இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜேம்ஸ் மற்றும் சிறு, குறுந்தொழில் அமைப்பினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி நஞ்சேகவுண்டா் வீதி, டிவிஎஸ் நகரில் தனியாா் ஆஸ்பெஸ்டாஸ் தொழில் நிறுவனமும், இன்ஜினீயரிங் தொழில் நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன. தனிநபா் ஒருவரின் புகாா் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் முறையான ஆய்வு மேற்கொள்ளாமல் இரண்டு நிறுவனங்களுக்கும் ‘சீல்’ வைத்துள்ளனா். இயந்திரங்களை வெளியே எடுத்து வைத்துவிட்டு நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைத்துள்ளதால் இயந்திரங்கள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.
பொது மக்களுக்கு இடையூறு ஏதும் இல்லாத நிலையில் தனிநபரின் புகாருக்கு உரிய ஆய்வுகூட மேற்கொள்ளாமல் மாநகராட்சி அலுவலா்கள் தன்னிச்சையாக எடுத்துள்ள நடவடிக்கை குறுந்தொழில் முனைவோா்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே ஆட்சியா் உரிய ஆய்வு நடத்தி இரண்டு தொழில் நிறுவனங்களையும் இயக்குவதற்கு மீண்டும் அனுமதியளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.