கோவை சிறையில் வ.உ.சி.க்கு மரியாதை

சுதந்திர போராட்டத்தின் போது வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இங்கு அவர் 2 வருடம் 4 மாதம் 22 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சிறையில் அவரை சித்ரவதை செய்யும் நோக்கில் செக்கு இழுக்க வைக்கப்பட்டார். அவர் இழுத்த செக்கு சிறை வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் விழா கோவை மத்திய சிறையில் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு மற்றும் அவருடைய மார்பளவு சிலை, உருவப்படம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு சிதம்பரனார் இழுத்த செக்கு மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக், கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், எஸ்.பி ஊர்மிளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வ.உ .சி இழுத்த செக்கிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி மரியாதை செலுத்தி விட்டு வந்தார். அப்போது வைகோவும், வேலுமணியும் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கைகுலுக்கி கொண்டனர். பின்னர் அங்கிருந்து கிளம்பினார்.இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் செக்கிற்கு மரியாதை செலுத்தினர்.