நள்ளிரவில் இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிய பெண்ணால் கோவையில் பரபரப்பு

நள்ளிரவில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் ஆட்டோ டிரைவர் பாலியல் சில்மிஷம் செய்ததால் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்ணால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அண்ணா வீதி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் என்பவரின் மகள் தாரகா சிவகுமார் (22). இவர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் பிசினஸ் டெவலப்மெண்ட் எக்ஸிக்யூட்டிவாக பணிபுரிந்து வருகிறார் இதற்காக அவரது நிறுவன மேலாளர் உடன் செல்வபுரம் பகுதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பணி சம்பந்தமாக தாரா சிவகுமார் திருப்பூருக்கு சென்றுள்ளார். பணி முடிந்த அவர் நள்ளிரவில் கோவைக்கு திரும்பினார். ஹோப் காலேஜ் பகுதியிலிருந்து தான் தங்கி இருக்கும் இடத்திற்கு செல்வதற்காக ராப்பிடோ ஆப் மூலம் ஆட்டோ ஒன்றை புக் செய்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆட்டோவில் தாரகா சிவகுமார் ஏறிக்கொள்ள ஆட்டோ புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சில வினாடிகளிலேயே ஆட்டோவை ஓட்டி வந்த நபர் தாரா சிவகுமாரிடம் பேச்சு கொடுத்ததுடன் பாலியல் சில்மிசத்திலும் ஈடுபட்டுள்ளார். இதை தொடர்ந்து தாரகா சிவகுமார் ஆட்டோவை நிறுத்தும்படி சத்தம் போட்டு உள்ளார். ஆனால் ஆட்டோ டிரைவர் ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக ஆட்டோவை ஓட்ட தொடங்கியுள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. அப்போது ஆட்டோ வேகமாக அவிநாசி ரோடு பீளமேடு அடுத்த ஃபன் மால் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தது. இதனால் பயந்து போன தாரகா சிவக்குமார் என்ன செய்வது என்று புரியாமல் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் தாரகா சிவகுமாருக்கு தலை கை, கால்கள் மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். பின்னர் தனது செல்போன் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இது பற்றி தகவல் தெரிவித்தார். சாலையில் அடிபட்டு இளம்பெண் கிடைப்பதை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து அவரை மீட்டு பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து இது பற்றி தகவல் அறிந்த பீளமேடு போலீசார் தாரகா சிவகுமாரிடம் விசாரணை நடத்தினர் .விசாரணையில் அவர் தான் ராப்பிடோ ஆப் மூலம் ஆட்டோவை புக் செய்ததாகவும் அந்த ஆட்டோ எண் மற்றும் ஆட்டோ டிரைவர் குறித்த விபரங்களை அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் ஆட்டோ நம்பரை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவை உக்கடம் அருள் நகர் பகுதியில் சேர்ந்த ஷேக் தாவுத் என்பவரின் மகன் முகமது சாதிக் (43 ) என்பவர் தான் அந்த ஆட்டோ டிரைவர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தான் ஆட்டோ கால் டாக்ஸி களில் நள்ளிரவில் செல்லும் பெண்களிடம் இது போன்ற பாலியல் சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. கோவையில் இதுவரை இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருந்தது. இந்நிலையில் மொபைல் ஆப் மூலம் ஆட்டோ புக் செய்து சென்ற இளம் பெண்ணிடம் ஆட்டோ டிரைவர் ஒருவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு அவரிடமிருந்து தப்பிக்க அந்த இளம் பெண் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.