தொழிலதிபர் வீட்டில் 16 லட்சம் திருட்டு: வேலைக்காரர் கைது

கோவை பாப்பநாயக்கன் பாளையம் ஜி கே டி நகர் பகுதியில் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் செல்வகுமார் (56). இவர் கட்டுமான பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழிலதிபரான இவர் வியாபார சம்பந்தமாக கடந்த 14ஆம் தேதி சென்னைக்கு செல்வதற்கு தயாரானார். அப்போது வீட்டின் பீரோவில் 20 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு அதில் இருந்து 9 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பிறகு நேற்று மாலை கோவைக்கு திரும்பினார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 16 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு காணாமல் போயிருந்தது. மீதம் மூன்று லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மட்டுமே பீரோவில் இருந்தது. பின்னர் சிசிடிவி காட்சிகளை அவர் பார்த்த பொழுது வீட்டில் வேலைக்கு இருந்த சிவகங்கை சேர்ந்த சகாதேவன் என்பவர் பணத்தை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டு எடுத்துச் செல்வது தெரிய வந்தது.தொடர்ந்து செல்வகுமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தனிப்படை போலீசார் சிவகங்கை பதுங்கி இருந்த சகாதேவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.