கோவை,
கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் தீபக் அரோரா. இவரது மனைவி பிரியா அரோரா. இவர்கள் இருவருக்கும் 15 வயதில் ஒரு மகன் மற்றும் 13 வயதில் மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தீபக் அரோராவும் அவரது மனைவி பிரியா அரோராவும் பிரிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பிள்ளைகள் அம்மா பிரியா அரோராவுடன் வசித்து வருகின்றனர். அவ்வப்போது மகன் மற்றும் மகள் தங்களது தந்தை தீபக் அரோராவை சென்று சந்தித்து விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் 15 வயது மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயாரின் காரை எடுத்து ஓட்டி சென்றுள்ளார். இதைப் பற்றி அறிந்த பிரியா அரோரா தனது மகனை கண்டித்துள்ளார் இருந்த போதும் அவர் அந்தச் சிறுவன் தனது தாயாருக்கு தெரியாமல் அடிக்கடி காரை எடுத்து ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி கோவை அவிநாசி சாலையில் 15 வயது சிறுவன் காரை ஓட்டிச் சென்று போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மறுநாள் சிறுவனை அவரது அம்மா பிரியா அரோரா மீண்டும் மீண்டும் கண்டித்துள்ளார். இதை தொடர்ந்து அந்த சிறுவன் காரை தனக்கு தெரிந்த ஒருவரிடம் விற்கப் போவதாகவும் தான் தற்போது காரை ஓட்டிச் செல்வதாகவும் கூறியிருக்கிறான். இதை தொடர்ந்து பிரியா அரோராவுக்கும் அவரது 15 வயது மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது .தகராறு முற்றிய நிலையில் தனது மகனை பிரியா அரோரா பெல்டால் அடித்துள்ளார் .மேலும் சிறுவன் தனது தாயை அடிக்க முற்பட்டுள்ளார் . தொடர்ந்து சிறுவன் தனது தந்தைக்கு செல்ஃபோன் மூலம் அழைத்து தன்னை தாய் அடித்து கொண்டு இருப்பதாக கூறியிருக்கிறார். உடனடியாக சிறிது நேரத்தில் தீபக் அரோரா பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தனது நண்பர்கள் சிவா கார்த்தி பூவை தங்கம் ஆகிய மூன்று பேரை அழைத்துக் கொண்டு பிரியா அரோரா வசித்து வரும் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு நுழைந்தவுடன் தகராறு செய்து மகனை அழைத்துச் செல்வதாக கூறியிருக்கிறார் .அப்பொழுது அங்கு இருந்த 13 வயது மகளை ஆபாச வார்த்தைகளால் பேசியதாகவும் , அத்துமீறி அந்த சிறுமியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது . பின்னர் சிறுவனை அங்கிருந்து அழைத்துச் சென்ற தீபக் அரோரா சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் . இந்நிலையில் வீடு புகுந்து தன்னிடம் ஆபாச வார்த்தைகள் பேசியதோடு அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் பிரியா அரோராவின் 13 வயது மகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அதே சமயத்தில் 15 வயது சிறுவன் கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார் .புகாரின் பேரில் போலீசார் 15 வயது சிறுவனின் தாயார் பிரியா அரோரா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . 15 வயது சிறுவன் கார் ஓட்டி அதை கண்டித்து தாய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது கோவையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் பைக் மற்றும் கார்களை ஓட்டக்கூடாது என விதிமுறை உள்ளது. அதை மீறி அவர்கள் அப்படி ஓட்டினால் போலீசார் அவர்களுடைய பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுப்பது வழக்கம். இது குறித்து பல்வேறு வழக்குகள் இந்தியாவில் நடைபெற்று பெற்றோர்களை நீதிமன்றம் தண்டித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் சிறுவன் காரை ஓட்டிய விவகாரத்தில் சிறுவனை கண்டித்த தாய் மீது கோவை சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது வினோதமாக உள்ளது.