ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் கடன்:இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை 

கோவை,

கோவையில் இன்ஜினியர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் இழந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை சிங்காநல்லூர் அடுத்த உப்பிலிபாளையம் ஆர் பி எல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி என்பவரின் மகன் ஷங்கர் (29). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார் .இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை விஷயமாக வெளியூருக்கு செல்வதாக தனது குடும்பத்தாரிடம் கூறிவிட்டு புறப்பட்டார். பின்னர் காந்திபுரம் ராம் நகர் சாஸ்திரி ரோடு பகுதியில் உள்ள சுபஸ்ரீ ஹோட்டலில்  நேற்று முன்தினம் மதியம்  அறை எடுத்து தங்கி உள்ளார் . இந்நிலையில் சங்கர் நேற்று மாலை வரை அறையில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார் . மேலும் தரை கதவும் திறக்கப்படாமல் இருந்துள்ளது.இதை தொடர்ந்து ஹோட்டலின் மேலாளர் சிவதாசன்  ஹோட்டல்  ஊழியர்களிடம் கதவை தட்டிப் பார்க்குமாறு கூறியிருக்கிறார். கதவை வெகு நேரமாக தட்டியும் ஷங்கர் கதவை திறக்கவில்லை .இதை தொடர்ந்து மாற்று சாவியை கொண்டு கதவை திறந்து பார்த்தனர் .அப்போது ஷங்கர் தூக்கில் பிணமாக தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் .இது குறித்து அவர்கள் உடனே காட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அவரது அறையை சோதனையிட்ட போது அங்கு கடிதம் ஒன்றை சங்கர் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த கடிதத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாயை இழந்து விட்டதாக ஷங்கர் குறிப்பிட்டிருந்தார். மேலும் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடமும் பல லட்ச ரூபாய் கடன் வாங்கியிருப்பதால் தன்னால் திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.