
கோவை,கோவையில் கஞ்சா வைத்திருந்த இளம்பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
அவிநாசி சாலைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பீளமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த பெண் உள்பட இருவரிடம் விசாரித்தனா்.
அப்போது அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களது இருசக்கர வாகனங்களில் இருந்த மூட்டைகளை சோதனையிட்டபோது அதில் 94 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கங்கா பிரசாத் (26) மற்றும் 19 வயது பெண் என்பதும், இன்ஜினியரிங் பட்டதாரியான கங்கா பிரசாத் குடும்பத்தினருடன் கோவையில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், கூடுதல் வருமானத்துக்காக பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, கங்கா பிரசாத்தை கைது செய்த போலீஸாா், அவருடன் இருந்த உறவுக்கார பெண்ணையும் கைது செய்தனா்.