டாஸ்மாக் பாரில் தகராறு: ஐந்து பேர் சிறையில் அடைப்பு

கோவை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் தங்கராஜ் என்பவரின் மகன் பாலு (37 ).இவர் கோவை காந்திபுரம் ஏழாவது வீதி எக்ஸ்டன்சன்  பகுதியில் உள்ள டாஸ்மார்க் பாரில்  கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சில வாலிபர்கள் குடிபோதையில் வந்து மது பாட்டில்கள் வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது பாலு கடை நேரம் முடிந்துவிட்டது. இனிமேல் மதுபாட்டில்கள் தர முடியாது என கூறியிருக்கிறார் .இதை தொடர்ந்து ஆத்திரமடைந்த வாலிபர்கள் அங்கு இருந்த டாஸ்மார்க் பார் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து  ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்த ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு தகராறு செய்த அனைவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து டாஸ்மாக் பாரில்  பணிபுரிந்த பாலு அளித்த புகாரின் பேரில் டாஸ்மார்க் ஊழியர்களை தாக்கியதாக கிருஷ்ணகிரியை சேர்ந்த செந்தில் (25), ரத்தினபுரியைச் சேர்ந்த ஜெயக்குமார் (20 ),தினேஷ் (29) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் டாஸ்மார்க் ஊழியர்கள் தாக்கியதில் காயமடைந்த வினோத்குமாரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதே போல டாஸ்மார்க் பார் ஊழியர்கள் தங்களை தாக்கியதாக வினோத்குமார் அளித்த புகாரின் பேரில் டாஸ்மார்க் பாரில் பணிபுரிந்த ஊழியர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை  சேர்ந்த பிரகாஷ் (29) சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (37 )ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.