எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை
போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட 7 எம்.எல். ஏக்கள் கைது

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதை கண்டித்து
அவரது வீட்டின் முன்பு திரண்டு போராட்டம் நடத்திய 7 அதிமுக எம் எல் ஏக்கள் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.


முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மூன்றாவது முறையாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகரப் பகுதிகளில் 4 இடங்கள், புறநகர் பகுதிகளில் 6 இடங்கள் என 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


கோவை மாநகரில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லம், கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் அலுவலகம், சபரி எலக்ட்ரிகல்ஸ், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசன் இல்லம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
இதேபோல புறநகரில் நமது நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் இல்லம், ஏஸ் டெக் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், இல்லம் சி.ஆர். கன்ஸ்ட்ராக்ஸ்சன்ஸ் நிறுவனம், ஏஸ் டெக் நிறுவனம் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கோவையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில் சோதனை நடத்தப்படுவதை அறிந்த அதிமுக தொண்டர்கள் அவரது வீட்டில் முன்பாக குவிந்தனர்.
அதிமுக எம் எல் ஏகள் அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர். ஜெயராமன் உட்பட ஏராளமான அதிமுகவினர திரண்டனர்.
அதிமுக தொண்டர்கள் வேலுமணியின் இல்லம் முன்பாக குவிவதை தடுக்க தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் அதிமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் ஒரு பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிய அனுமதி மறுத்த போலீசார் , அங்கு திரண்டிருந்தவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது அதிமுக தொண்டர்களை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி போலீசார் கைது செய்தனர்.
பின்னர் 7 அதிமுக எம் எல் ஏக்கள உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பு பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உட்பட அதிமுகவினர் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் .அங்கு அவர்கள் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் வெளியில் செல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *