அரியவகை பவளப்பாறை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது

கோவை வீர கேரளம் அடுத்த வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாம்சன் (43). இவர் கோவை சிறுவாணி மெயின் ரோட்டில் பழைய நாணயங்கள் மற்றும் பழமையான பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் அரிய வகையான தடை செய்யப்பட்ட பவளப்பாறைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் ஒரு குழுவாக சென்று சாம்சன் கடையில் சோதனை செய்தனர் . இந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட 4 பவளப்பாறைகள் மற்றும் பவள பாறைகளை கொண்டு செய்யப்பட்ட 2 மாலைகள் ஆகியவை அங்கு இருந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் சாம்சனை மதுக்கரை வன அலுவலர் சந்தியாவிடம் ஒப்படைத்தனர். அவர் பவளப்பாறைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த சாம்சனை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். உலகிலேயே அந்தமானில் மட்டும் கிடைக்கக்கூடிய இந்த பவளப்பாறையின் விலை ஒரு கிராம் ரூ.2,500 ஆகும். இந்த பவளப்பாறை சாம்சனுக்கு எவ்வாறு கிடைத்தது, அவர் யாரிடம் வாங்கினார். இதற்கு முன்பு இதுபோன்று பவளப்பாறைகளை அவர் விற்பனை செய்து உள்ளாரா, எத்தனை ரூபாய்க்கு வாங்கி அவர் விற்றார், அவருடன் தொடர்புடையவர்கள் யார் என்பது பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *