எதிர் வீட்டுக்காரருடன் தகராறு
மெக்கானிக் திடீர் சாவு

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (41). இவருக்கு பார்வதி (36 )என்ற மனைவி உள்ளார். ராஜா டூவீலர் மெக்கானிக்காக மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வீட்டுக்கு எதிரே வசித்து வருபவர் ராஜா முகமது என்பவரின் மகன் ஜான் முகமது( 34). எலக்ட்ரீசியன் ஆன இவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களாக பைனான்ஸ் கொடுத்த நபர்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ஒரு சிலர் ஜான் முகம்மதை தேடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். பிறகு ராஜா வீட்டுக்கு அருகே நின்று அவர்கள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இது ராஜாவிற்கு இடைஞ்சலாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ராஜா எதிர் வீட்டில் வசிக்கும் ஜான் முகமதுவின் தாயாரிடம் சென்று அடிக்கடி பைனான்ஸ் நபர்கள் வந்து செல்வது தங்களுக்கு கஷ்டமாக இருப்பதாக கூறியிருக்கிறார். பின்னர் அங்கிருந்து ராஜா புறப்பட்ட சென்று விட்டார். நேற்று மாலை வெளியே சென்றிருந்த ஜான் முகமது வீட்டிற்கு வந்தார். பின்னர் ராஜா குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் .மேலும் ராஜாவை தகாத வார்த்தைகள் பேசியதோடு அவரை கைகளால் தாக்கியுள்ளார். பின்னர் அருகில் உள்ளவர்கள் அவரை சமாதானம் செய்து ராஜாவை அவரது வீட்டிற்கு அழைத்து ச் சென்றனர். சிறிது நேரத்தில் ராஜாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரது குடும்பத்தார் அவரை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர் .உடனே ராஜாவை அழைத்துக் கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்தார் மருத்துவர்கள் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . இது குறித்து பார்வதி பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர் .தொடர்ந்து ராஜாவிடம் தகராறு ஈடுபட்டு தாக்குதல் நடத்திய ஜான் முகமது (34) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.