ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த நகை தொழிலாளி மாயம்

கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி தாஸ் என்பவரின் மகன் பங்கஜ் (30). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தேவி தாஸ் கடந்த 20 வருடங்களாக கோவையில் வசித்து வருகிறார். பங்கஜுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இவர் தாமஸ் வீதியில் நகை பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார் .பங்கஜுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடுவது பொழுதுபோக்கான விஷயமாகும். இதில் கடந்த சில மாதத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பங்கஜ் இழந்துள்ளார். இது குறித்து தெரிந்த அவரது குடும்பத்தார் பங்கஜை கண்டித்துள்ளனர். இதனால் மணமுடைந்த நிலையில் இருந்து வந்த பங்கஜ் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் அவரது செல்போன் எண்ணம் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரது குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து அவரது தந்தை தேவிதாஸ் வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி காணாமல் போன பங்கஜை தேடி வருகின்றனர்.