
கோவை அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள காளியண்ணன்புதூர் பாரதி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( 53). வெல்டிங் தொழிலாளியான இவருடைய மனைவி மனோன்மணி (45). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்திக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தாக தெரிகிறது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி மனைவியிடம் சண்டைபோட்டு விட்டு, குளத்துப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி கடந்த 9-ந் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து மனோன்மணி கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். பிணமாக மீட்பு இந்த நிலையில் காளியண்ணன்புதூர் சுடுகாடு செல்லும் வழியில் புதரில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தது வெல்டிங் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தி எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.