
கோவை,
தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த, 3 பெண்கள் உட்பட நான்கு பேரை கைது செய்து, 50 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் மாநகர போலீஸ் ஸ்டேன்களில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நகை பறிப்பு திருடர்களை படிக்க உத்தரவிட்டார். உதவி கமிஷனர் ரவி தலைமையில், இன்ஸ்பெக்டர் கண்ணையன், எஸ்.ஐ.,க்கள் மாரிமுத்து, உமா, போலீசார் கார்த்தி, பூபதி, முத்துராமலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மாநகரில் பல்வேறு இடங்களில் சாதாரண உடையில் ரோந்து சென்று கண்காணித்து வந்தனர். அப்போது டவுன் ஹாலில், 3 பெண்கள் ஓடி சென்று ஆட்டோவில் ஏறி செல்வதை போலீசார் பார்த்தனர். அந்த ஆட்டோ போக்குவரத்து நெரிசலுக்கு இடையே சென்றதால் அவர்களால் உடனே பிடிக்க முடியவில்லை. பின் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமிராக்களை ஆய்வு செய்து அந்த ஆட்டோவின் எண்ணை கைப்பற்றினர். ஆட்டோவின் விவரங்களை சேகரித்து டிவைரிடம் விசாரித்தனர். அப்போது ஆட்டோ டிரைவர் அந்த, 3 பெண்களை அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டதாகவும், 100 ரூபாய் வாடகைக்கு, 200 ரூபாய் தந்ததாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் அரசு மருத்துவமனை மற்றும் பஸ் ஸ்டாப்பில் உள்ள சி.சி.டி.வி., கேமிராக்களை பார்த்தனர். அதில் அந்த பெண்கள் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒரு பையை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு எதிரே உள்ள பஸ் ஸ்டாப்க்கு வந்ததும், அங்கு ஒரு வாலிபரிடம் போனை வாங்கி பேசி, பஸ் ஏறி சென்றதும் பதிவாகி இருந்தது. பின் போலீசார் அந்த பெண்களிடம் போனை கொடுத்த நபரை கேமிராவில் கண்காணித்தனர். அதில் அவர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் உள்ள ஒரு பெண்ணிடம், 15 நிமிடம் பேசி சென்றது இருந்தது. போலீசார் அந்த வாலிபரின் போட்டோவை எடுத்து கொண்டு அரசு மருத்துவமனையில் உள்ள, 4 வார்டிலும் சென்று விசாரித்தபோது அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த ஒரு பெண்ணின் உறவினர் என்பதும், அவர் திருப்பூரில் வசித்து வருவதும் தெரிந்தது. அவரின் முகவரியை பெற்று கொண்டு போலீசார் திருப்பூர் விரைந்தனர். அங்கு அந்த வாலிபரிடம் விசாரித்து அவரது போன் மூலம் அந்த பெண்கள் பேசிய எண்ணை கைப்பற்றினர். அந்த போன் எண் உள்ள இடத்தை பார்த்த போது அது மேட்டுப்பாளையத்தில் உள்ள சொகுசு ஓட்டலை காட்டியது. போலீசார் அங்கு சென்ற போது அந்த நபர் ஓட்டலை காலி செய்து சென்று விட்டதாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பின் அந்த போன் எண் யாருடையது என்ற விவரத்தை சேகரித்து, தொடர்ந்து அந்த போன் எண்ணை டிரக் செய்த போது பெங்களூரை காட்டியது. பெங்களூர் செல்ல திட்டமிட்ட போது அந்த போன் எண் சென்னைக்கு வந்தது. சென்னையில் தொடர்ந்து போன் எண் இருந்ததால் தனிப்படை போலீசார் ஜேப்படி கும்பலை பிடிக்க சென்னைக்கு போலீஸ் வேனில் விரைந்தனர். அப்போது போலீஸ் வேன் சேலம் அருகே வந்தபோது விபத்துக்குள்ளாகி போலீசார் பலத்த காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் சேலத்தில் சிகிச்சை பெற்று கோவை திரும்பினர். ஆனாலும் போலீசார் அந்த எண்ணை தொடர்ந்து டிராக் செய்து வந்த போது மீண்டும் அந்த கும்பல் கோவை மருதமலைக்கு வந்திருந்தது தெரிந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று கோவிலில் இருந்த 3 பெண்களையும், அவர்களுக்கு ஐடியா தந்து வந்த ஒருவரையும் மடக்கி பிடித்து வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். விசாரித்ததில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ரவி(47), அவரது மனைவி பழனியம்மாள்(40) உறவினர்கள் வனிதா( 37)நதியா(37) ஆகியோர் என்பது தெரிந்தது. அதில், ரவி அவர்களை வழி நடத்தி வந்ததும், 3 பெண்கள் அவரது வழிகாட்டுதலின் படி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ், கோவில், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தும் உள்ளனர். இதையடுத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 50 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜேப்படி கும்பலால் வேறு யாரும் பாதிப்படைந்து விடகூடாது என்பதற்காக தனிப்படை போலீசார் அவர்களை விரைந்து கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர். அந்த கும்பல் சென்னையில் இருப்பதை அறிந்ததும், போலீசார் இரவோடு இரவாக போலீஸ் வேனை ஏற்பாடு செய்து சென்னை புறப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக லாரி மோதி வேன் விபத்துகுள்ளானது. அதில் இன்ஸ்பெக்டர் கண்ணையன், எஸ்.ஐ., மாரிமுத்துவிற்கு எழும்பு முறிவு ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள், ஜேப்படி கும்பல் மருதமலையில் இருப்பதை அறிந்து கட்டுடன் வந்து கைது செய்தனர்.

ஜேப்படி கும்பல், மாதத்தில் 30 நாட்களில், 20 நாட்கள் திருட்டிலும், 10 நாட்கள் சுற்றுலாவும் சென்று வந்து உள்ளனர். சுற்றுலாவின் போது நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உள்ளனர். கணவன், மனைவியான ரவி, பழனியம்மாள், காஷ்மீர், டெல்லி மும்பை என இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்து உள்ளனர். நகை திருடும் முன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது அவர்கள் வழக்கமாக வைத்து இருந்தனர். அவர்கள் நகை திருடிய பணத்தில் பெங்களூரில் 5 கோடி ரூபாயில் வீடு, விலை உயர்ந்த கார் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளனர். அவர்களின் குழந்தைகள் டாக்டர் மற்றும் இன்ஜினியரிங் படித்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது.