கோயம்புத்தூர் என்ற பெயரைக் கேட்டதும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கொஞ்சு மொழியாம் கொங்கு தமிழும், கற்கண்டின் சுவைக்கு நிகரான சிறுவாணி நீரும்தான். கோடையிலும் இதம் தரும் பருவநிலை, ஏனுங்க-வாங்க-போங்க என மரியாதை கலந்த பேச்சுவழக்கு, விருந்தோம்பல், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் அடங்கிய சுற்றுப்புறங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், வந்தாரை வாழ வைக்கும் பஞ்சாலைகள், தொழில் நிறுவனங்கள், மாசுகளற்ற மின்சாரம் தரும் காற்றாலைகள், அறிவுக் கண்களைத் திறக்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், பக்தி மணம் கமழும் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை கோவையின் இதர சிறப்புகள்.
இப்பகுதியைப் பழங்குடி மக்களாகிய கோசர்கள் ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்று இருந்ததே கோயம்புத்தூர் என மருவியது என்பார் சிலர். கோவன் என்பவன் இங்கு வசித்ததால் இதன் பெயரான கோவன் புதூர் என்பது மருவி கோயம்புத்தூர் ஆனது என்றும் கூறப்படுகிறது. “பேரூர் நாட்டுக் கோவன் புத்தூரான வீரகேரள நல்லூர்” என்ற கல்வெட்டின் மூலம், கோயம்புத்தூர் என்பது பேரூர் நாட்டில் அமைந்திருந்தது என்று கருதலாம்.
கோவைக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. 9ஆம் நூற்றாண்டில் கோவைப் பகுதி சோழர் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். 14ஆம் நூற்றாண்டில் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீழான மதுரையைச் சேர்ந்த இஸ்லாமியர் ஆட்சிப் பகுதியாக இருந்தது. பின்னர் விஜயநகரப் பேரரசின்கீழ் மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
18ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னருக்குமிடையே நடைபெற்ற போரைத் தொடர்ந்து, கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது. மைசூரை ஹைதர் அலி கைப்பற்றியபோது கோவையும் அவருடைய ஆட்சியின்கீழ் வந்தது. அவருக்குப் பிறகு, மகன் திப்பு சுல்தான் ஆட்சியின் கீழ் வந்தது. ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடுமையாகப் போரிட்டவர்கள். திப்பு சுல்தான் மறைவுக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் மைசூரை முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைத்தனர். ஆனால் கோவையை தங்களின் மெட்ராஸ் மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். கொங்குநாட்டைச் சேர்ந்த தீரன் சின்னமலை, திப்புவின் உதவியுடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் புரட்சி நடத்தவும், கோவை கோட்டையைப் பிடிக்கவும் திட்டமிட்டார். ஆனால், வீரர்களின் ஆர்வக் கோளாறு காரணமாக, திட்டமிட்ட நாளுக்கு முந்தைய நாளே இந்தத் திட்டம் ஆங்கிலேயருக்குத் தெரிந்து போனது. துவக்கப்படாமலே கோவைப்புரட்சி தோல்வி கண்டது.
- கோயம்புத்தூர், மைசூர் ஆட்சிக்கு கீழ் வந்தது. 1760ல் மைசூர் ஆட்சியை ஹைதர் அலி கைப்பற்றினார்.அப்போது தான் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போர் நடந்தது. கடைசியில் திப்புசுல்தானை கொன்று, ஆங்கிலேயர்கள் கோவையை சென்னை மாகாணத்தோடு சேர்த்தனர்.
- 1804ம் ஆண்டு கோயம்புத்தூரை தலைநகரமாக அமைத்தார்கள். பிறகு, 1848ம் ஆண்டு சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் கோயம்புத்தூரில் முதல் நகராட்சி தலைவராக பதவி ஏற்றார்.
- 1876 லிருந்து 1878 வரை கோவையில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. 1900ல் பெரிய பூகம்பம் வந்து பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 1928 ல் பருத்தி விளைச்சல் அமோகமாக இருந்ததால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதற்கு பின், கோவை பல முன்னேற்றங்களை கண்டுள்ளது.
- 1981ல் சிங்காநல்லூர் நகராட்சி, கோயமுத்தூர் நகராட்சியுடன் சேர்க்கப்பட்டு கோவை மாநகராட்சியாக மாறியது. இது தான் கோவையின் வரலாறு.

கோவையைத் தலைநகராகக் கொண்ட கோவை மாவட்டம் இன்றைய ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. கோயம்புத்தூர் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனைச் சுற்றி மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் வடக்கில் நீலகிரி பல்லுயிர் வலயமும் பாதுகாக்கப்பட்ட காடுகளும் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1350 அடி உயரத்தில் அமைந்துள்ளது கோவை.
தமிழ்நாட்டில், சென்னைக்கு அடுத்த மிகப்பெரிய நகரம் கோவை. தென்னக ரயில்வேயில் சென்னைக்கு அடுத்து அதிக வருவாய் பெறுவது கோவை ரயில்நிலையம். சிறப்பான பேருந்து வசதிகளும், உள்நாட்டு-வெளிநாட்டு விமானப் போக்குவரத்து வசதியும், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் செல்லக்கூடிய ரயில் போக்குவரத்து வசதியும் கொண்டது கோவை. முப்படைகளுக்கும் தளம் அமைந்திருந்த இடம் கோவை. கடற்படையின் ஐஎன்எஸ் அக்ரானி, சூலூரில் விமானப்படைத்தளம், வெலிங்டனில் ராணுவப் பயிற்சிப் பள்ளி ஆகிய மூன்றையும் கொண்ட சிறப்பு கோவைக்கு உண்டு. வெலிங்டன் இப்போது நீலகிரி மாவட்டத்தில் சேர்ந்து விட்டது.
2011 கணக்கெடுப்பின்படி மாவட்டத்தின் மக்கள்தொகை 35 லட்சம். 84 சதவீதத்தினர் எழுத்தறிவு பெற்றவர்கள். பல்வேறு மதத்தினரும், பல மொழிகள் பேசுவோரும் வசிக்கும் காஸ்மோபாலிடன் நகரமாகத் திகழ்கிறது கோவை. இம்மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உள்ளன. மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை,பேரூர் ஆகிய 7 தாலுக்காக்கள் உள்ளன.