190 கிலோ கஞ்சா- கஞ்சா சாக்லெட் பறிமுதல்

கோவை,

கேரளாவுக்கு கஞ்சா சாக்லெட்டுகள் கடத்தப்படுவதாக கேரள மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கேரள மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தமிழக- கேரள மாநில எல்லையான வாளையாரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மீன்களை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் வந்தது. அந்த வாகனத்தை மறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வாகனத்திற்குள் இருக்கும் மீன் பெட்டிகளுக்கு இடையே கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் அதில் இருந்த 190 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் சின்னகுர் பேட்டையை சேர்ந்த செல்வம்(38), காமராஜபுரத்தை சேர்ந்த மாரிமுத்து(27) என்பதும் தெரியவந்தது.

செல்வம் கடல் மீன்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்ல் மேலாளராக பணியாற்றி வருவதும், ஆந்திராவில் இருந்து வந்த 190 கிலோ கஞ்சாவை மீன் பெட்டிகளுக்கு இடையே மறைத்து வைத்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 190 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் கையில் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர்.

அதில், தங்க கலரில் பாக்கெட் ஒன்று இருந்தது. அதனை போலீசார் பிரித்து பார்த்த போது, அதில் கஞ்சா சாக்லெட் இருப்பதை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து அந்த வாலிபரிடம் விசாரித்தனர். விசாரணையல் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார் சிங் என்பதும், இந்த பகுதியில் பொம்மை கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.

மேலும் இவர் வடமாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, இங்குள்ள வடமாநில வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் அவரிடம் 6.5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்றதாக போலீசால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *