பிரேக் பிடிக்காத பஸ் டீக்கடைக்குள் புகுந்து விபத்து 

கோவை,கோவையில் இருந்து ஆனைகட்டி வழியாக கேரள மாநிலம் மன்னார்காட்டிற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இது ஒரு மலைப்பகுதியாகும்.கோவையில் இருந்து புறப்படும் பஸ் ஆனைக்கட்டியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு விட்டு, பின்னர் மன்னார்காட்டிற்கு செல்லும். நேற்று மதியம் கோவையில் இருந்து பஸ் மன்னார்காட்டிற்கு புறப்பட்டது. பஸ்சை வெள்ளிங்கிரி என்பவர் ஓட்டினார்.ஆனைக்கட்டி அருகே வந்த போது பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் பஸ் அந்த பகுதியில் இருந்த ஒரு டீக்கடையில் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் வெள்ளிங்கிரி பஸ்சை இயக்கி சென்று விட்டார்.இந்த நிலையில் வெள்ளிங்கிரியின் தனது பணி முடிந்ததும் புறப்பட்டு விட்டார். அந்த பஸ்சிக்கு குப்புராஜ் என்பவர் டிரைவராக வந்தார். அவரிடம் பிரேக் பிடிக்காததை வெள்ளிங்கிரி தெரிவிக்கவில்லை என தெரிகிறது.மாலையில் கோவையில் இருந்து அதே பஸ் மன்னார்காட்டிற்கு புறப்பட்டது.பஸ்சை குப்புராஜ் ஓட்டினார்.ஆனைகட்டியில் பஸ்சை நிறுத்த முற்படும் போது பிரேக் பிடிக்கவில்லை. பிரேக் பிடிக்காததால் பஸ் அங்குள்ள அய்யப்பன் கோவிலில் பூஜைக்காக போடப்பட்டிருந்த பந்தலை இடித்து கொண்டு அருகே இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது.இந்த விபத்தில் ஒரு சிலர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அங்கு நிறுத்தியிருந்த ஒரு காரும் சேதம் அடைந்தது.இதனையடுத்து அங்கு வந்த மற்றொரு அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர். மேலும் போக்குவரத்து கிளை பொதுமேலாளர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும். வந்தால் மட்டுமே பஸ் விடுவிக்கப்படும் என தெரிவித்தனர்.தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பஸ்சை விடுவித்து கலைந்து சென்றனர்.இதுகுறித்து மக்கள் கூறும் போது, ஆனைக்கட்டி மலைப்பகுதியில் இயங்கும் அரசு பஸ்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் இயங்குவதாகவும், இதனால் அடிக்கடி பஸ்கள் பழுதடைந்து விபத்திற்குள்ளாவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.