பேத்தியின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வெளியிட போவதாக மிரட்டிய பாட்டி

கோவை,

கோவை பீளமேடு அடுத்த காந்தி மாநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் சேர்ந்தவர் 20 வயது இளம் பெண் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவரது தாயாருக்கும் அவரது பாட்டி சுபத்ராவுக்கும் இடையே ஏற்கனவே சொத்து குறித்த தகராறு இருந்து வருகிறது. மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாட்டி சுபத்ரா 20 வயது கல்லூரி மாணவியான தனது பேத்தியின் படங்களை ஆபாசமாக சித்தரித்து தனது மகள் செல்போனுக்கு அனுப்பி வைத்தார். இதை பார்த்து கல்லூரி மாணவியின்  தாயார் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பாட்டி சுபத்ரா தனது மகளை அழைத்து இந்த புகைப்படங்களை இணையதளங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார் .மேலும் தன் மீது  கொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும் என்றும் சொத்துக்களை திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டி இருக்கிறார். இதனால்  அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் பாட்டி சுபத்ரா மீது  மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து விவகாரத்தில் பேத்தியின்  புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில்  வெளியிட  போவதாக மிரட்டிய பாட்டி செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.