போலீஸ் விசாரணைக்கு பயந்து மோதிரத்தை விழுங்கிய வாலிபர்

கோவை,

கோவை வடவள்ளி பகுதியில் நேற்று சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தொண்டாமுத்தூரை சேர்ந்த விஜய் ( 26) என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதற்கிடையில் விசாரணையின்போது திடீரென விஜய் தனது கையில் அணிந்து இருந்த மோதிரத்தை விழுங்கிவிட்டார். இதனால் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் மீட்டு, கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு இனிமா கொடுத்து மோதிரத்தை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். இதையடுத்து கஞ்சா விற்பனை செய்ததற்காக அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.