தடுப்பணையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

கோவை,

கோவை செல்வபுரம் அருகே தெலுங்குபாளையம் பாரதிரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் ( 44).இவரது மகன் நவீன்குமார் (15). இவர் டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில், நேற்று பள்ளிக்குச் செல்லாமல், தனது சக நண்பர்கள் 3 பேருடன், ஆலாந்துறையை அடுத்துள்ள பெருமாள்கோவில் பதியில், உள்ள முண்டந்துறை தடுப்பணை பகுதிக்கு குளிக்கச் சென்றனர். சக நண்பர்களுடன் தடுப்பணையில் உள்ள நீரில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த நவீன்குமார், திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதைக்கண்ட நண்பர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் நவீன் குமார் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தடுப்பணையில் இறங்கி, பல மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, மாணவரின் உடலை மீட்டனர். தொடர்ந்து, மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.