குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதை தட்டிகேட்ட முதியவருக்கு கத்தி குத்து

கோவை, 

கோவை அடுத்த நெகமம் எரிப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் ( 62). இவர் அதே பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று ஆறுமுகம் வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு வாலிபர் ஒருவர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறு செய்து கொண்டு இருந்தார் . இதனை பார்த்த ஆறுமுகம் அந்த வாலிபரிடம் அமைதியாக செல்லுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆறுமுகத்தை குத்தினார்.

இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

பின்னர் பலத்த காயம் அடைந்த ஆறுமுகத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதகுறித்து ஆறுமுகம் நெகமம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.