கோவை பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு சொந்தமான கடைகளில் ஒரே நேரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை:

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பாஜக மண்டலத் தலைவருக்கு சொந்தமான கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மனுஸ்மிரிதி குறித்து திமுக எம்பி ஆ ராசா கருத்து தெரிவித்திருந்த நிலையில் அதை கண்டித்து பாஜகவினரும் இந்து அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆ ராசாவை முதல்வர் ஸ்டாலின் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள் அந்த அமைப்பின் நிர்வாகிகளின் வீடு ஆகியவற்றில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பினர் பெரும் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு கோவையில் சித்தாபுதூர் என்ற பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். அது போல் கோவை காந்திபுரத்தில் இருந்த துணிக் கடை மற்றும் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகனுக்கு சொந்தமான வெல்டிங் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்த துணிக் கடையும் இந்து முன்னணியினருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. அது போல் பொள்ளாச்சியில் பொள்ளாச்சியை அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பாஜக மாவட்டச் செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதில் இரு கார், இரு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
இதேபோல மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோடு பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் மதன்குமார் (53), மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த நிகில்சந்த் மகன் சச்சின் (45) இவர்கள் இருவரும் மேட்டுப்பாளையம் கோவை சாலையில் கடந்த 13 ஆண்டுகளாக ப்ளைவுட் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் கடையின் கண்ணாடியை உடைத்து பெட்ரோல் குண்டை கடையின் குடோனில் வீசி உள்ளனர். இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்து பார்க்கும் போது பிராந்தி பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு குடோனில் வீசப்பட்டு சிதறி கிடந்தது. பிளாஸ்டிக் கவர்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டும், குடோனில் சிதறி கிடந்தது ப்ளைவுட்கள் பாதி எரிந்து கருகிய நிலையில் இருந்தது. இதை அடுத்து மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில், குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன் வட்டாச்சியர் மாலதி,காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம் முருகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இரண்டு கடைகளிலும் எதற்காக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது