
கோவை,
ஈமு கோழி நிதி நிறுவனம் நடத்தி, 5 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், கணவன், மனைவிக்கு, 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், நாச்சிபாளையம் அருகே ரங்கபாளையத்தை சேர்ந்தவர் சிவசேனாபதி(45). தாராபுரம் ரோட்டில், சிவா ஈமு பார்ம் உள்ளிட்ட பெயர்களில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி மோகன பிரியதர்ஷினி(40), தாயார் பத்மாவதி(65), ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர். இந்நிறுவனத்தில், 1 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்தால், மாதம், 10 ஆயிரம் ரூபாய் வட்டி, ஆண்டுதோறும், 10 ஆயிரம் போனஸ் மற்றும் இரண்டு ஆண்டுகள் கழித்து டிபாசிட் தொகை முழுவதையும் திருப்பி தருவதாக விளம்பரப்படுத்தினர்.
இதற்காக, 31 இடங்களில் கிளை அலுவலகம் அமைத்து, 337 பேரிடம், 5 கோடி ரூபாய் வரை வசூலித்தனர். சில மாதங்கள் மட்டும் வட்டி கொடுத்து விட்டு, நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகினர்.பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.போலீசார் வழக்கு பதிந்து, 2012ல், மூவரையும் கைது செய்தனர். கோவை டான்பிட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கடந்த, 10 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.
விசாரணை முடிந்ததை தொடர்ந்து, நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்.குற்றம் சாட்டப்பட்ட சிவசேனாபதி, இவரது மனைவி மோகன பிரியதர்ஷினி ஆகியோருக்கு, மோசடி செய்த குற்றத்திற்கு, தலா, 7 ஆண்டு சிறை, தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்டப்பிரிவு, 5ன் கீழான குற்றத்திற்கு, தலா, 10 ஆண்டு சிறை தண்டனை, மொத்தம், 2.42 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பத்மாவதி விடுவிக்கப்பட்டார்.தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளதால், மொத்தம், 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை பெற்ற இருவரும் கோர்ட்டில் ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.