
கோவை,
துடியலூர் அருகே உள்ள வெள்ளகிணர் பிரிவில் வி.கே.எல். நகர் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தினந்தோறும் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம்போல தூய்மை பணியாளர்கள் அந்த பகுதியில் குப்பைகளை அகற்றி கொண்டிருந்தனர். அங்குள்ள குப்பை தொட்டியில் கிடந்த குப்பைகளை அள்ளி லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது குப்பை தொட்டிக்குள் மனிதனின் கை ஒன்று கிடந்தது. இதை பார்த்ததும் தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது குப்பை தொட்டிக்குள் கிடந்த கையை பார்த்தனர். அது 40 வயது மதிக்கத்தக் வாலிபரின் இடது கை என்பதும், வெட்டி 3 நாட்களுக்கு மேல் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த கை எப்படி இங்கே வந்தது? யாராவது மர்மநபர்கள், வாலிபரை கொலை செய்து விட்டு, அவரது கையை மட்டும் இங்கு கொண்டு வந்து வீசி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர இந்த பகுதிகளில் காணமால் போனவர்களின் விவரங்களையும் சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.