உக்கடம் மேம்பால கட்டுமான பணியில் சாரம் சரிந்ததால் பரபரப்பு

கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, 1.9 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில், மூன்று இடங்களில் ஏறு தளம் மற்றும் இறங்கு தளம் அமைக்கப்பட உள்ளது.இதன்படி, உக்கடம் பஸ் ஸ்டாண்டின் உள்ளே ஐந்து இடங்களில் தாங்கு துாண்கள் அமைக்கப்பட்டு, ஏறு தளம் அமைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. இதற்காக, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரும்பு பைப்புகளை இணைத்து தாங்கு சாரம் போடப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பில்லர் அருகே கான்கிரீட் போடப்பட்டுள்ளது. சுமார், 200 அடி நீளத்துக்கும், 100 அடி அகலத்துக்கும் கான்கிரீட் போடப்பட்டது. அப்போது தாங்கு சாரம் மற்றும் கான்கிரீட் பாலம் சாய துவங்கியதால் அதிர்ச்சியடைந்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பணியை நிறுத்தினர். பாலம் சரிய போவதை கண்டு பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். முன்கூட்டியே சுதாரித்துக்கொண்டதால், எவ்வித பெரும் விபத்துகளின்றி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர்தப்பினர்.இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தாங்கு சாரத்தில் இருந்த இணைப்பு கிளாம்புகள் சில இடங்களில் துண்டாகிவிட்டது. இதனை சரி செய்து சாரத்தை சீரமைக்கும் பணி நடக்கிறது. கான்கிரீட் எவ்வளவு துாரம் விலகி இருக்கிறது என்று கண்டறிந்து அதற்கேற்ப திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், கான்கிரீட் பாலம் விழாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.திடீரென சாரம் சரிந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *