
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜான் ஜெபசிங் (56).கல்குவாரி நடத்தி வருகிறார். தொழிலதிபராண இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழில் வளர்ச்சிக்காக திருப்பூரை சேர்ந்த அங்குராஜ் என்பவரிடம் ரூ. 6 லட்சத்தை 3 சதவீத வட்டிக்கு கடன் வாங்கினார். சில நாட்களுக்கு பின்னர் 3 சதவீத வட்டிக்கு பதிலாக 10 சதவீத வட்டி தர வேண்டும் எனக் கூறி அங்குராஜ் மற்றும் அவரது நண்பர்கள் திருப்பூரை சேர்ந்த கருணாகரன், மற்றும் கோவை அம்மன் குளத்தை சேர்ந்த இனியவன் என்கிற முருகேசன் (38) ஆகியோர் சேர்ந்து ஜான் ஜெபசிங்கை மிரட்டி உள்ளனர்.தொடர்ந்து வட்டி, அசல் சேர்த்து ரூ 10.25 லட்சம் தர வேண்டும் என கூறியுள்ளனர்.நேற்று மீண்டும் அவரது வீட்டிற்கு சென்று கூடுதல் வட்டி கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர். இதுகுறித்து ஜான்ஜெபசிங் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டிய இனியவன், கருணாகரன், அங்குராஜ் ஆகிய 3 பேர் மீதும் மிரட்டல், கந்து வட்டி தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று, கருணாகரனின் கார் டாக்குமெண்டை வாங்கி திருப்பி கொடுக்க மறுத்து மிரட்டல் விடுப்பதாக ஜான் ஜெபசிங் மற்றும் ஜானகிராம் என்பவர் மீது இனியவன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் ஜான் ஜெபசிங், ஜானகிராம் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.