சிங்காநல்லூரில் ரூ.141 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம்:ஜனவரியில் பணிகள் தொடக்கம்

கோவை சிங்காநல்லூரில் ரூ.141 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கோவையில் இருந்து கரூா், திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பிரதான சாலையாக திருச்சி சாலை உள்ளது. மேலும், தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்துதான் செல்கின்றன.
சிங்காநல்லூா் பகுதியில் சிக்னல் முதல் ஒண்டிப்புதூா் வரை காலை, மாலை வேளைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், பயணிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
நெரிசலைக் குறைக்க சிங்காநல்லூா் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கோவை – திருச்சி சாலையில் சிங்காநல்லூா் சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: சிங்காநல்லூா் உழவா் சந்தை அருகே தொடங்கி ஒண்டிப்புதூா் வரை 2.40 கிலோ மீட்டா் தூரத்துக்கு ரூ.141 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
தற்போது, மேம்பாலம் கட்டுவதற்காக ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.