கோவை நீதிமன்றத்தில் ஹெல்ப் டெஸ்க் துவக்கம்

கோவை நீதிமன்ற வளாகத்தில், வழக்கு தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள, ‘ஹெல்ப் டெஸ்க்’ அமைக்கப்பட்டுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 50க்கும் மேற்பட்ட கோர்ட்கள் செயல்படுகின்றன. வழக்கு தொடர்பாக, தினந்தோறும், ஆயிரக்கணக்கானமக்கள் வந்து செல்கின்றனர். நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு மற்றும் சாட்சியளிக்க வருவோருக்கு எந்த தளத்தில், எந்த நீதிமன்றம் செயல்படுகிறது என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு வழக்கு நிலவரம் என்ன, வாய்தா தேதி உள்ளிட்ட தகவல் அறிந்து கொள்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. அவர்களுக்கு உதவ, ‘ஹெல்ப் டெஸ்க்’ என்ற தகவல் மையம், மாஜிஸ்திரேட் கோர்ட் பில்டிங் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, பெண் ஊழியர் நியமிக்கப்பட்டு, அவருக்கு கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம், நீதிமன்ற உத்தரவு மற்றும் தீர்ப்பு விவரம், நகல் பெறுவதற்கான வழிமுறைகள், வழக்கறிஞர்களுக்கு இ- பைலிங் பற்றிய சந்தேகம் தீர்த்து வைத்தல், இ- ஸ்டாம்ப், மொபைல் போனில் இ- கோர்ட் செயலி பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள், அனைத்து நீதிமன்றங்களில் வழக்கு பட்டியல் குறித்த விவரம், இலவச சட்டஉதவி பெறுவதற்கான நடைமுறைகள், இ- கோர்ட் சர்வீஸ் வாயிலாக அறியக்கூடிய விவரம் உள்ளிட்ட, அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். வழக்கு எண் தெரியாதவர்கள், நீதிமன்றத்தின் பெயர் மற்றும் மனுதாரர் அல்லது எதிர்மனுதாரர் பெயர் விவரம் அளித்தாலும், வழக்கின் நிலவரத்தை அறிந்து தகவல் அளிக்கப்படுகிறது. நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, இந்த ‘ஹெல்ப் டெஸ்க்’ பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.