வேன் மோதி 2 பேர் பலி

கோவை அடுத்த கருமத்தம்பட்டி அருகே வேன் மோதி 2 பேர் பலியானார்கள். கோவை அடுத்த கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அவிநாசி தெக்கலூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (52) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி (60), செல்வராஜ் (62) ஆகிய 3 பேரும் ஒரு பைக்கில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு எதிரே வந்த வேன் எதிர்பாராத விதமாக அந்த பைக்கில் மோதியது.இதில் பைக்கை ஓட்டி வந்த ரவிச்சந்திரன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டனர். கந்தசாமியை அன்னூர் அரசு மருத்துவமனையிலும், செல்வராஜை கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர்கள் பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.