கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சுவாகத் இன்ஜினியரிங் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருபவர் மாணிக்கம் என்பவரின் மகன் அசோக்(54). இவரது நிறுவனத்தில் ரயில்வேக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் நிறுவனம் நடத்தி வரும் இடத்தின் உரிமையாளர் மனோகரன் இடத்தை காலி செய்யுமாறு கூறியிருக்கிறார். இதை அடுத்து அதற்குரிய ஏற்பாடுகளை அசோக் செய்து வந்தார். இந்த சூழலில் கடந்த ஆண்டு மே மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக எந்த விதமான பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது. மேலும் மத்திய அரசுக்கு சொந்தமான ரயில்வேக்கு பொருட்கள் அனுப்புவதால் அது குறித்த பாதுகாப்பு விதிமுறைகளை அசோக் பின்பற்றி அதற்குரிய விண்ணப்பங்களை ரயில்வே அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவித்து அதன் பின்பு நிறுவனத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது வழக்கம். அதன்படி அதற்குரிய வேலைகளை அசோக் செய்து வந்தார். இந்த சூழலில் இடத்தின் உரிமையாளர் மனோகரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென நள்ளிரவில் அடியாட்களுடன் அசோக் நடத்தி வந்த நிறுவனத்திற்குள் புகுந்தார். உள்ளே இருந்த மூலப் பொருள்கள், உதிரி பாகங்கள், விலைமதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் உட்பட அலுவலகத்தின் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களை தூக்கி வெளியில் வீசிவிட்டார். பல பொருள்களை வெளியில் கிடந்ததால் சிலர் திருடி சென்று விட்டனர். இது பற்றி தகவல் அறிந்த அசோக் அங்கு சென்று பார்த்து இது குறித்து உரிமையாளரிடம் கேள்வி எழுப்பினார் .அவர் சரிவர பதிலளிக்காமல் இருந்துள்ளார். இதை அடுத்து அசோக் பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ரயில்வே உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்திற்குள் அத்துமீறி புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வெளியில் தூக்கி வீசி திருடிச் சென்ற இடத்தின் உரிமையாளர் மனோகரன் , அவருக்கு உடந்தையாக இருந்த ராஜவேல், ஆனந்தகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
%d bloggers like this: