ராமஜெயம் கொலை வழக்கு: கோவையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

கோவை,
திருச்சியை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். தொழில் அதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி ராமஜெயம் திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக தற்போது சி.பி.சி.ஐடி போலீசாருக்கு முக்கிய தடயமாக மாருதி சுசூகி வெர்ஷா வாகனம் கொலை சம்பவம் நடைபெற்ற நாளில் அந்த பகுதியில் சென்றது தெரியவந்தது. அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் இந்த மாருதி சுசுகி வெர்ஷா வாகனம் சென்றது பதிவாகி உள்ளது. அதில் கொலையாளிகள் தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து விசாரிக்க சிபிசிஐடி சிறப்பு விசாரணை குழு 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாருதி சுசுகி வெர்ஷா வாகனத்தின் உரிமையாளர்களின் பட்டியலை சிபிசிஐடி போலீசார் திரட்டினர். அதன் பின்னர் வாகன உரிமையாளர்களின் வீட்டு முகவரிக்கு சென்று ரகசிய விசாரணையில் இறங்கி உள்ளனர். அப்போது கார் யார் பெயரில் உள்ளது? அவர்களுக்கு குற்றப்பின்னணி ஏதேனும் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். குறிப்பாக கோவையில் மட்டும் 250க்கும் மேற்பட்ட மாருதி சுசுகி வெர்ஷா உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.