
கோவை மாநகரில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள இடமாக கோவை-சத்தி சாலை உள்ளது. தினமும் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இந்த சாலை உள்ளது. எனவே இந்த சாலையில் டெக்ஸ்டூல் பாலம் முதல் 1.50 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையை அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறும்போது:
கோவை சரவணம்பட்டியில் பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், ஏராளமான நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன. எனவே இந்த சாலையின் அகலத்தை 80 அடியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, டெக்ஸ்டூல் பாலம் முதல் சத்தி சாலை வரை 1.50 கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் தலா 3 மீட்டா் அளவில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிலம் வழங்க நில உரிமையாளா்கள் 60 போ் சம்மதம் தெரிவித்து உள்ளனா். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு மாவட்ட வருவாய்த் துறை அலுவலரிடம் சமா்ப்பிக்கப்பட்டு உள்ளது. அனுமதி பெற்று, விரைவில் நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள்தொடங்கும் என்றாா்.