
கோவை,கோவை கிணத்துக்கடவு அடுத்த வட சித்தூர் பகுதியில் பெரியார் சமத்துவபுரம் உள்ளது.இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.இந்த சமத்துவ புரத்தில் முன் பகுதியில் தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது.பீடத்தின் மேல் இரும்பு கம்பிக்குள் சிலை உள்ளது.இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலை மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றி உள்ளனர்.இன்று காலை சமத்துவ புரத்தில் குடியிருக்கும் முருகன் என்பவர் பார்த்துள்ளார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.இது பற்றிய தகவல் கிணத்துக்கடவு போலீசாருக்கு கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.பின்னர் பெரியார் சிலை மீது ஊற்றியிருந்த சாணியை தண்ணீர் ஊற்றி கழுவினர்.இந்த தகவல் வேகமாக பரவியதை அடுத்து திமுகவினர், பெரியார் ஆதரவாளர்கள் திரண்டனர்.அவர்கள் பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து பெரியார் சிலையை அவமதித்தது யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பெரியார் சிலையை அவமதிப்பு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.