கோவை,
கோவை கணபதி அடுத்த காந்தி மாநகரை சேர்ந்தவர் நித்திஷ். இவரது நண்பர் ரஞ்சித் இரத்தினபுரி பகுதியிலும் , கார்த்திக் காந்திமா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். காந்திமா நகர் பகுதியை சேர்ந்த உண்ணி என்ற உன்னிகிருஷ்ணன் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் மற்றும் பெண் வன்கொடுமை வழக்குகள் உள்ளது. இந்த வழக்கில் சாட்சி சொல்வதற்காக கோவை கோர்ட்டில் விசாரணைக்கு ரஞ்சித், நித்திஷ், கார்த்திக் ஆகியோர் ஒரு ஆட்டோவில் இன்று கோர்ட்டுக்கு வந்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜராகி விட்டு மீண்டும் ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர். நஞ்சப்பா ரோட்டில் சென்ற போது நான்கு பைக்குகளில் எட்டு பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பின் தொடர்ந்து வருவதை பார்த்தனர். அந்த கும்பல் தங்களை வெட்ட வந்திருக்கும் என்று பயத்தில் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஆட்டோவை ராம் நகருக்குள் திருப்பினர். பைக்கில் வந்த வாலிபர்களும் ஆட்டோவை வேகமாக துரத்தியபடி வந்தனர். ஆட்டோ ராம் நகர் ராமர் கோயில் அருகே உள்ள தனியார் வங்கி முன்பு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கும்பல் ஆட்டோவை மறித்துள்ளது. இதனால் பயந்து போன மூன்று பேரும் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினர். பைக்கில் வந்த கும்பல் மூன்று பேரையும் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் 3 பேருக்கும் கை கால் மற்றும் உடலில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. எப்பொழுதும் பரபரப்பாக இயங்கி வரும் ராம் நகரின் மையப்பகுதியில் அதுவும் தனியார் வங்கி முன்பு மூன்று வாலிபர்களை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவத்தை பார்த்த பகுதி மக்கள் சத்தம் போடத் துவங்கினர். இதை தொடர்ந்து பைக்கில் வந்த கும்பல் தப்பித்து செல்ல முயன்றனர்.உடனே அங்கிருந்த பொதுமக்கள் சத்தம் போட்டபடி அந்த வாலிபர்களை துரத்திப் பிடிக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியில் போர்க்களம் போல் காட்சி அளித்தது .ஆனால் அதற்குள் வாலிபர்களை வெட்டிய மர்ம கும்பல் அங்கிருந்து தாங்கள் வந்திருந்த பைக்கில் தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ரஞ்சித் நித்திஷ் ஆகிய இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி யில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கும்பலை தேடி வருகின்றனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த 2 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *