
கோவை,
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள அறுவச்செட்டிபுதூரைச் சேர்ந்தவர் சம்பத்குமார் மகன் நித்திஷ் (16), டுடோரியல் கல்லூரியில் பயின்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ் என்பவரின் மகன் வினு (19), கீரணத்தம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். நண்பர்களான இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ், லோகராஜ், சுரேந்தர் ஆகியோருடன் கக்கராயன் மலைப் பகுதிக்கு நேற்று சென்றுள்ளனர்.
அப்போது, அங்கிருந்த பாறைக் குழி நீரில் குளிப்பதற்காக நித்திஷும், வினுவும் இறங்கியுள்ளனர். நீச்சல் தெரியாத இருவரும் ஆழமான பகுதிக்குச்சென்றதாக கூறப்படுகிறது. இதில், அவர்கள் நீரில்
மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட சக நண்பர்கள் அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு நேரம் ஆனதால் தேடும் பணியில் தொய்வு ஏற் பட்டது. அவர்களை தேடும் பணி இரவு 9 மணி வரை நடைபெற்றது. வெளிச்சம் இல்லாத காரணத்தினால் இப்பணி நிறுத்தப்பட்டு இன்று காலை 6 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டது
கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் கோவையிலிருந்து கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு
பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேஷன்,சுரேஷ் மற்றும் வீரர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது நாயக்கன்பாளையத்தைச் சார்ந்த ஒரு குடும்பத்தினரும் தங்கள் மகனையும் காணவில்லை என்று தெரிவித்ததன் அடிப்படையில் அங்கு துரிதமாக தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் நாயக்கன்பாளையத்தைச் சார்ந்த நித்தியநாதன் என்ற பள்ளி மாணவரும் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரிய வந்தது.
அவர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். மூவரின் உடல்களும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டன. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.