
கோவை,
கோவை வடவள்ளி அடுத்த வேம்பு அவன்யூ, குறிஞ்சி வீதியில் குடும்பத்தோடு வாடகைக்கு வீட்டில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்தார்.
ராஜேஷ் தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி லக்ஷயா என்கிற சுருதி (29) பிரெஞ்சு மொழியில் டாக்டர் பட்டம் பெற்றவர். ராஜேஷின் மனைவி அப்பகுதியில் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.
இவர்களது மகள் யக்க்ஷிதா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுடன் ராஜேஷின் தாயார் பிரேமா (73) வசித்து வந்தார்.
இந்நிலையில் லக்க்ஷயாவின் தந்தை பாலன் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது மகளுடன் செல்போனில் பேசி உள்ளார். பின்னர் அன்று இரவு தனது மகளை தொடர்பு கொண்ட போது, செல்போன் ஆப் செய்து வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் .
வீட்டின் உரிமையாளர் ஷீலா வீட்டிற்கு வெளியே லைட் போட வரும் போது, வீட்டிற்குள் இருந்து தூர்நாற்றம் வீசி உள்ளது. லக்ஷ்யாவின் தந்தைக்கு உங்கள் மகள் வீட்டில் இருந்து தூர்நாற்றம் வருகிறது என ஷீலா செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். பாலன் உடனடியாக தனது மகள் வீட்டிற்கு வந்து பார்த்த போது, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. பாலன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளார்.
இதை தொடர்ந்து வடவள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டை திறந்து பார்க்கும் போது அதில் லக்ஷயா, யக்க்ஷிதா, பிரேமா ஆகியோர் சடலமாக கிடந்து உள்ளனர். மேலும் தூக்கில் தொங்கிய நிலையில் ராஜேஷின் உடல் இருந்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நால்வரது உடலையும் மீட்ட காவல் துறையினர், பிரதே பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராஜேஷுக்கு கடந்த சில மாதங்களாக கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் ராஜேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்ய திட்டமிட்டு தனது மகள், மனைவி, தாய் ஆகிய மூவருக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.