
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2009-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற சி. விஜயகுமார் கடலூர், நாகை, திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். சென்னை சி பி சி ஐ டி யில் பணியாற்றினார் . அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை அண்ணா நகர் துணை காவல் ஆணையராக பணியாற்றினார்.அவருடைய சிறப்பான பணியின் காரணமாக ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 மணிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்துவிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்துள்ளார். இந்த தகவல் அறிந்து உயர் காவல் அதிகாரிகள் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் . இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மக்களைத் திருப்தியாக வைத்திருக்க வேண்டும் என்று பணியாற்றிய காவல் துறை உயர் அதிகாரி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்றிரவு துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டி ஐ ஜி விஜயகுமாருக்கு சொந்த ஊர் தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஆகும்.இவரது தந்தை ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஆவார்.இவரதுமனைவி பெயர் கீதாவாணி. பல் மருத்துவம் படித்தவர். இவர்களுக்கு ஒரு மகள் மட்டும் உள்ளார். தற்கொலை செய்து கொண்டார் டி ஐ ஜி விஜயகுமாரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது அங்கு மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உட்பட அதிகாரிகள் வந்து நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.