
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழில் துறையினருடனான கலந்துரையாடல் கூட்டம் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையில் நடந்தது.
11 வழக்குகள்
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 1-ந் தேதி முதல் வட மாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என பரவி வரும் பொய்யான வதந்தி வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 11 வழக்குகள் பதியப்ப ட்டுள்ளது.
தமிழகத்துக்கு தொடர்பு இல்லாத வீடியோக்களை போட்டு தமிழகத்தில் நடந்தது போல் காட்டி வதந்தி பரப்புகிறார்கள். இதை யார் எங்கே இருந்து எப்படி செய்கிறார்கள் என விசாரித்து வருகிறோம்.
பணத்திற்காக…
போலீசின் ரகசிய விசாரணையில் ஒரு கும்பல் பணத்திற்காக இதுபோல் வதந்தி வீடியோ தயாரித்து வெளியிடுவதை கண்டறிந்திருக்கிறோம்.
இது போன்ற வதந்தி பரப்பும் கும்பலை பிடிக்க போபால், பாட்னா, டெல்லி பெங்களூரு நகரில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர். போலீஸ் எடுத்த நடவடிக்கை காரணமாக வதந்தி பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் வீடியோக்களை பகிரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
வாட்ஸ்-அப் குழு
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனத்தினரை ஒருங்கிணைத்து ஒரு நிறுவனத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் வாட்ஸ் அப் குழு அமைக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.
வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகள், வளாகம் போன்ற பகுதியில் கண்காணிப்பு காமிரா அமைக்கவும், போலீஸ் ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பு குழு
ஜார்கண்ட், பீகார் மாநிலங்களில் உள்ள வட மாநில தொழிலாளர்களின் உறவினர்கள் பயத்தில் இருக்கிறார்கள். இவர்களின் பயத்தை போக்கும் வகையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டிருக்கிறது.
குற்றவாளிகள் மீது நடத்தப்படும் துப்பாக்கி சூடு அந்த இடம் மற்றும் சூழ்நிலை பொருத்து ஏற்படுகிறது. ஆபத்து ஏற்படும்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். திட்டமிட்டு துப்பாக்கி சூடு எதுவும் நடத்தப்படுவதில்லை
கவனமாக இருக்கவும்
கூகுள் பே மூலம் பணம் அனுப்பி தவறுதலாக அனுப்பி விட்டோம் எனக் கூறி அதை திருப்பி அனுப்ப சொல்லி சில மோசடி கும்பல் கேட்பதாக தெரிகிறது. அவர்கள் கூகுள் பேவில் திரும்ப லிங்க் அனுப்பி அதன் மூலம் பணத்தை திருப்பி அனுப்ப சொல்லி கேட்கிறார்கள்.
அப்படி லிங்க் வந்தால் அதில் பணம் அனுப்ப வேண்டாம். மேலும் ஓ.டி.பி. விவரங்களையும் யார் கேட்டாலும் சொல்லக்கூடாது. எனவே மக்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு
பேட்டியின் போது மாவட்ட போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உள்பட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.