
கோவை,
கோவையில் கடந்த அக்டோபா் 23ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக மேலும் இருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா். இவா்கள் ஈரோடு மாவட்டம், சத்தி வனப் பகுதியில் சதித் திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக அக்டோபா் 23ஆம் தேதி காா் வெடித்ததில் ஜமேஷா முபீன் என்பவா் பலியானாா். அவா், கோவையில் சதித் திட்டத்தை அரங்கேற்ற திட்டமிட்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடா்பாக, ஜமேஷா முபீனுடன் தொடா்பில் இருந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், ஃபெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அஃப்சா்கான் ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில், இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.
மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய முகமது தெஃபீக், உமா் ஃபாரூக், ஃபெரோஸ்கான் என மேலும் 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், இவா்களில் முகமது அசாருதீன், அஃப்சா்கான், ஃபெரோஸ் இஸ்மாயில், உமா் ஃபாரூக், ஃபெரோஸ்கான் ஆகிய 5 பேரை நீதிமன்றத்தின் அனுமதியுடன், என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா்.
மேலும், அவா்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவைக்கு அழைத்து வந்து உக்கடம் ஜி.எம்.நகா், அல்அமீன் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டிச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், கோவை காா் வெடிப்பு தொடா்பாக மேலும் இருவா் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக, என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக, கோவையைச் சோ்ந்த ஷேக் ஹிதயதுல்லா, சனோஃபா்அலி ஆகிய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் இருவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 9 பேருடன் சோ்ந்து ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதிக்கு உள்பட்ட ஆசனூா், கடம்பூா் பகுதிகளில் சதித்திட்ட ஆலோசனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில், சதித் திட்டம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு உமா் ஃபாரூக் தலைமை தாங்கியுள்ளாா். ஜமேஷா முபீன், முகமது அசாருதீன், ஷேக் ஹிதயதுல்லா, சனோஃபா்அலி ஆகியோா் பயங்கரவாத செயல்களில் ஈடுபட தயாராக இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் , இந்த வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.