
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்பி நமச்சிவாயம் வழிகாட்டுதலின் பேரில் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான போலீசார் இடிகரை அருகில் உள்ள அத்திப்பாளையம் பஸ் நிலைய பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். கையில் பொட்டலமும் வைத்திருந்தார்.
இதையடுத்து போலீசார் வாலிபர் அருகே சென்றனர். போலீசாரை பார்த்த வாலிபர் அங்கிருந்து செல்ல முயன்றார். உடனடியாக போலீசார் வாலிபரை மடக்கி பிடித்தனர்.
அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தனர். அப்போது அதில் கஞ்சா சாக்லெட்டுகள் மற்றும் கஞ்சா இருந்தது. உடனடியாக அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திரகுமார் சாகு(வயது31) என்பதும், கஞ்சா சாக்லெட்டுகளை விற்பதற்காக அங்கு நின்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து, 16½ கிலோ எடையுள்ள 70 கஞ்சா சாக்லெட் மற்றும் 1100 கிராம் எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.