
கோவை,
கோவை சித்தாபுதூர் அய்யப்பசுவாமி கோவிலில் மண்டல விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.இதை யொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணி வதற்காக கோவிலுக்கு வருகை தருவார்கள். மண்டல விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 1- ந் தேதி முதல் 12-ந்தேதி வரை ஆலயத்தின் தந்திரி பிரம்மஸ்ரீ சிவப்பிரசாத் நம்பூதிரி தலைமையில் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சனி தோஷ சாந்தி ஜெபமும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 13-ந்தேதி அய்யப்ப சாமிக்கு களபாபிஷேகம் நடைபெறும். மண்டல விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 17-ந் தேதி அகண்ட நாம பஜனையும், 18 -ந் தேதி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், பொது மக்களும் பங்குபெறும் அன்னதானம் நடைபெற உள்ளது. 27-ந்தேதி மகா கணபதி ஹோமமும், மண்டல விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. மகர விளக்கு காலங்களில் மாலை அணிவதற்கும் இருமுடி கட்டி சபரிமலை பயணம் செல்வதற்காகவும் வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அய்யப்ப சேவா சங்கம் செய்துள்ளது. ஜனவரி 14-ந்தேதி மகரஜோதியை முன்னிட்டு யானை வாத்தியத்துடன், காட்சி சீவேலியும் மாலையில் மகா தீபாராதனையும் நடைபெறும். இந்த தகவலை கோவை சித்தாபுதூர் அய்யப்ப சாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.