
கோவை,
மனிதநேய ஜனநாயக கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவைக்கு சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, அதிகாலையிலேயே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து பேசி தற்போதுள்ள கள நிலவரத்தை கேட்டறிந்துள்ளார். இதனிடையே தமிமுன் அன்சாரியின் காரை மறித்த போலீசார் அவரது வருகை குறித்த காரணத்தை விசாரித்த பின்னர் அனுமதித்தனர். கட்சியினரிடம் தகவல் சொன்னால் பெரும் கூட்டம் கூடிவிடும் என்பதால், நிர்வாகிகளுக்கு கூட தகவல் சொல்வதை தவிர்த்து சர்ப்ரைஸாக விசிட் அடித்து பொதுமக்களை சந்தித்துள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சென்னையிலிருந்து ரயில் மூலம் இன்று அதிகாலை கோவை வந்தடைந்தார். ரயில் நிலையத்தில் இருந்து விடுதி அறைக்கு செல்வதற்கு முன்பாக, கோவையின் யதார்த்த கள நிலவரத்தை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டிய அவர் நேராக கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதி, ராமர் கோவில் பகுதி, உக்கடம் ஆகிய பகுதிகளுக்கு விசிட் அடித்து காய்கறி வியாபாரிகள், தேநீர் கடைகள், தொழிலாளர்களை சந்தித்துப் பேசி தற்போதுள்ள சூழல் பற்றி அறிந்துகொண்டார்.

கைலி, டி ஷர்ட்டுடன் சென்ற தமிமுன் அன்சாரியை பார்த்து சிலர் அடையாளம் கண்டுக்கொண்டதோடு, அதிகாலையிலேயே வந்திருக்கிறாரே என்னவாகும் இருக்கும் என பேசிக்கொண்டனர். கார் வெடிப்பு நிகழ்வுக்கு பின்னர், கடந்த ஒரு வார கால சூழல்களை விவரித்த சிறுகடை வியபாரி ஒருவர், வாங்க டீ சாப்பிடலாம் என அழைத்துச் சென்று தமிமுன் அன்சாரிக்கு டீ வாங்கிக் கொடுத்தார். இந்து – முஸ்லிம் என்ற பாகுபாடு இன்றி எப்போதும் போல் எல்லோரும் ஒன்றாக பழகி வருவதாக அந்த வியாபாரி தெரிவித்தார்.இதனிடையே தமிமுன் அன்சாரியிடம் பேசிய உக்கடம் பகுதி இஸ்லாமியர்கள் சிலர், வன்முறை, தீவிரவாதம். பிரிவினை பேசுபவர்களை நாங்கள் யாருமே, எப்போதும் மதிப்பதில்லை என்றும் அவர்களை சாதி, மதம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என்ற கருத்தையும் சிலர் கூறினர். தற்போது நிலைமை சீராக உள்ளதாகவும் விரும்பத்தகாத சம்பவங்களை காரணம் காட்டி பதற்றத்தை தூண்டாமல் இருந்தாலே, அதுவே பெரிய உதவி என்றும் வியாபாரிகள் அன்சாரியிடம் தெரிவித்தனர்.அதிகாலையில் சுமார் ஒரு மணி நேரம் சுற்றி சுற்றி பலரிடமும் உரையாடிய மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி
கூறும்போது கோவை மக்கள் எப்பொழுதும் ஒற்றுமை ,அமைதியை விரும்புபவர்கள் வன்முறை மற்றும் மதவெறியை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள் .இவ்வளவு பதட்டமான சூழலுக்கு மத்தியில் பொதுமக்கள் சகஜமாக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார். மேலும் அமைதியான, ஒற்றுமையான வாழ்வையே இரு சமூகங்களை சேர்ந்த சாமானிய மக்கள் விரும்புவதாக சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். பிரிவினை சக்திகளை இரு சமூகங்களை சேர்ந்த கோவை மக்கள் எதிர்ப்பது வரவேற்கத்தக்க ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கோவையில் உள்ள அனைத்து மத முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து வருகிறார் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கோவை சி.எஸ்.ஐ திருமண்டல செயலாளர் சார்லஸ் சாம்ராஜ், மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் ஆகியோரை இன்று காலை சந்தித்து பேசினார். தொடர்ந்து இன்று மாலை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து மத தலைவர்களுடன் பேச இருப்பதாக தமிழ் முன் அன்சாரி தெரிவித்தார்.