கோவை,
கோவையில் இன்று அதிகாலை காரில் இருந்த சமையல் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே இன்று அதிகாலை 4: 10 மணியளவில் திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதியில் இருந்தவர்கள் அந்த சத்தம் கேட்டு அங்கு வந்தனர் .அப்போது அங்கு கார் ஒன்று தீப்பிடித்து இருந்து கொண்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீயணைப்பு துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த காரின் தீயை அணைத்தனர். அதில் ஒருவர் உடல் கருகி இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்த போது காருக்குள் வைக்கப்பட்டிருந்த சமையல் சிலிண்டர் வெடித்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கார் பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது எனவும் வேகத்தடையில் கார் ஏறி இறங்கிய போது சிலிண்டர் அழுத்தம் காரணமாக வெடித்திருக்கலாம் எனவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலிசார் தெரிவித்தனர். மேலும் காரில் பயணம் செய்தது யார் எதற்காக அவர் அதிகாலை நேரத்தில் அந்தப் பகுதிக்கு சென்றார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். கோவை நகரில் காரில் வைத்திருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.